சோயா புலவு

சோயா புலவு

தேவையானவை:

பாசுமதி அரிசி - 2 கப், சோயா உருண்டைகள் - 10, பெரிய வெங்காயம் - 3, தக்காளி சாஸ் - ஒன்றரை டீஸ்பூன், இஞ்சி + பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன், புளித்த தயிர் - அரை கப், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: பட்டை - 1 துண்டு, லவங்கம் - 2, ஏலக்காய் - 2, சீரகம் - 1 டேபிள்ஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை:

சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு ஒரு நிமிடம் கழித்து, வடிகட்டி, மீண்டும் பச்சைத்தண்ணீரில் 2 முறை போட்டு அலசிப் பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள். அந்த உருண்டைகளை இரண்டாக நறுக்கிக்கொள்ளுங்கள். பாசுமதி அரிசியை ஊறவைத்து, முக்கால் பதமாக வேக வைத்து வடித்துக்கொள்ளுங்கள். நெய்யைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் இரண்டாக நறுக்கிய சோயா உருண்டைகளை அதனுடன் சேர்த்து நன்கு வதக்குங்கள். அதோடு இஞ்சி + பூண்டு விழுது, மிளகாய்தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்குங்கள். பிறகு, தக்காளி சாஸ் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்கவிட்டு, தயிர், உப்பு சேருங்கள்.
இது நன்கு கொதித்ததும், தீயைக் குறைத்து, வடித்த சாதத்தை அதனுடன் சேர்த்து, மூடி வைத்து, சிறு தீயில் 15 முதல் 20 நிமிடங்கள் வைத்து இறக்குங்கள். பரிமாறும்போது, சாதம் உடையாமல் நன்கு கலந்து பரிமாறுங்கள்.

குறிப்பு: சாதத்தை முக்கால் பதமாக வடித்து சேர்க்கும் புலவுகள் செய்யும்போது, சாதத்தை வடித்ததும், கொதிக் கும் மசாலாவில் சேர்த்துவிட வேண்டும். வடித்து, சிறிது நேரம் வைத்திருந்து சேர்த்தால், அரிசி போல கடிபடும்.