வற்றல் குழம்பு

வற்றல் குழம்பு + வற்றல் குழம்புப் பொடி

எனது ஆருயிர் அண்ணன் கேட்டதற்கு இனங்க இதை பிரசூரம் செய்கிறேன்.

வற்றல் குழம்பு செய்வதில் இது ஒரு முறை. இதை சுண்டைக்காய் வற்றல் குழம்புக்கான குறிப்பாகக் கொடுத்திருக்கிறேன். ஆனால் இதே முறையில் மணத்தக்காளி வற்றல், மினுக்கு வத்தல், வெண்டை, கொத்தவரங்காய், பாகற்காய் வற்றல்களிலும் செய்யலாம். நான் இரண்டு மூன்றை சேர்த்துப் போட்டும் செய்வேன்.

தேவையான பொருள்கள்:

புளி – எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் – 5 அல்லது 6
சுண்டைக்காய் வற்றல் – 20 *
வற்றல் குழம்புப் பொடி – 1 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணை – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு
வெல்லம் – சிறிது (விரும்பினால்)

தாளிக்க – கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

1.புளியை கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.

2.அடுப்பில் வாணலியில் நல்லெண்ணை விட்டு, முதலில் வற்றலை வறுத்துக் கொள்ளவும்.

3.அதன்மேலே கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலையும் சேர்த்துத் தாளிக்கவும்.

4.மேலே வற்றல் குழம்புப் பொடியைப் போட்டு வறுத்துக் கொண்டு, புளிநீரைச் சேர்க்கவும்.

வாசனை தூக்குகிறதா?
5.உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, கெட்டியாக இறுகி, பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விட்டு இறக்கவும்.

6.விரும்பினால் இறக்கும் முன் ஒரு சிறு துண்டு வெல்லம் சேர்க்கவும். மற்றும் கொத்தமல்லித் தழை.

7. வற்றல் குழம்புப் பொடி இல்லாவிடில் அன்றாடம் உபயோகிக்கும் சாம்பார்ப் பொடியையே உபயோகிக்கலாம்.

8.சுண்டைக்காயில் இரும்புச் சத்து மிகுதியாக உள்ளது.

9. வறட்டு இருமல், ஆஸ்துமா, ஜுரம், வயிற்றுப் பூச்சியினால் ஏற்படும் வலி, சிறுநீர்ப் பிரச்சினை என பலவற்றிற்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து.

10. காரணம் தெரியாமல் திடீரென வயிற்றுவலி வந்தால், சுண்டைக்காயை எண்ணையில் வறுத்து, நெய், உப்புடன் சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டுப் பார்க்கவும்.

வற்றல் குழம்புப் பொடி

தேவையான பொருள்கள்:

காய்ந்த மிளகாய் – 1 கப்
தனியா – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1 கப்
மிளகு – 3 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 3 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் – சிறு துண்டு

செய்முறை:

மேலே சொல்லியிருக்கும் எல்லாச் சாமான்களையும் வெறும் வாணலியில் தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும்.
ஆறியதும் மிக்ஸியில் மிக நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். ஆறு மாதங்கள் வரை கெடாது