அருகம்புல் பருப்புக் குழம்பு

அருகம்புல் பருப்புக் குழம்பு

தேவையானவை:
அருகம்புல் வேர்ப்பொடி - 2 டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்
எலுமிச்சைசாறு - 2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 200 கிராம்
தக்காளி - 150 கிராம்
சின்னவெங்காயம் - 200 கிராம்
தேங்காய்த்துருவல் - கால் மூடி அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

துவரம் பருப்பை வேகவைத்துக் கடைந்துகொள்ளவும். தக்காளி, சின்னவெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய்த்துருவலுடன் அருகம்புல் வேர்ப்பொடியைச் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்துக் கரைய வதக்கி, சிறிது உப்பு சேர்த்துக் கிளறவும். இத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) கலந்து கொதிக்க விடவும். 10 நிமிடம் கழித்து, அரைத்த தேங்காய்விழுது, கடைந்த பருப்பு ஊற்றி, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இதில் எலுமிச்சைச்சாறு, சேர்த்துக் கலக்கி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து குழம்பில் ஊற்றி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:
வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகியவற்றால் உடலில் ஏற்படக்கூடிய முப்பிணிகளையும் போக்கக்கூடியது, அருகம்புல். புல்லை விட வேர் அதிக அளவு சக்தியுள்ளது.