கேரட் அல்வா

ஈஸியான... கேரட் அல்வா

அல்வா என்றாலே திருநெல்வேலி அல்வா மட்டும் தான் அனைவரது நினைவுக்கும் வரும். ஏனெனில் அங்கு தான் அல்வா நன்கு சுவையோடு, சூப்பராக இருக்கும். ஆனால் அத்தகைய அல்வாவில் ஒன்றான கேரட் அல்வாவை எளிதாக வீட்டிலேயே செய்யலாம். அதிலும் 30 நிமிடங்களிலேயே அருமையான சுவையில் கேரட் அல்வா செய்யலாம்.

பொதுவாக நிறைய பேர் கேரட் அல்வாவை ட்ரை செய்திருப்பார்கள். ஆனால் அல்வாவை செய்ய போய், அல்வாவைத் தவிர பசையை செய்தவர்கள் தான் அதிகம். இங்கு கேரட் அல்வாவை எப்படி எளிதில் செய்வதென்று கொடுத்துள்ளோம். அதை ட்ரை செய்து பார்த்து, எப்படியிருந்தது என்று சொல்லுங்கள்.

தேவையான பொருட்கள்:

துருவிய கேரட் - 4 கப்
பால் - 2 கப்
தண்ணீர் - 1.5 கப்
கண்டென்ஸ்ட் மில்க் - 1/3 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 12
உலர் திராட்சை - 10
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கேரட், பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

அதே சமயம், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை நன்கு பொன்னிறமாக வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு பிரஷர் குக்கரை திறந்து, அதனை அப்படியே அடுப்பில் வைத்து, 10-15 நிமிடம் தீயை குறைவில் வைத்து கொதிக்க விட வேண்டும். (அதுவும் கலவையானது சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.)

அடுத்து அதில் கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து நன்கு 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும். (சர்க்கரை சேர்க்காததால், தேவையான அளவு கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்துக் கொள்ளலாம்.) பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கிளறி, அத்துடன் அந்த நெய்யையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

இறுதியில் அதன் மேல் ஏலக்காய் பொடியைத் தூவி, பிரட்டி விட வேண்டும். கலவையானது நன்கு அல்வா பதத்திற்கு வந்த பின்னரே, அதனை அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். இப்போது சுவையான கேரட் அல்வா ரெடி!!!

குறிப்பு: வேண்டுமெனில் கேரட் அல்வா செய்த பின்னர், பாதாம் மற்றும் பிஸ்தாவை துருவி, அதன் மேல் தூவி பரிமாறலாம்.