கம்புக் களி/கூழ்

கம்புக் களி/கூழ்

தேவையானவை:
கம்பு/ராகி - 300 கிராம்
பெரிய அல்லது சின்ன வெங்காயம் - சின்ன வெங்காயம் - 2 (அ) பெரிய வெங்காயம் - 1
உப்புக்குப் பதிலாக - தேங்காய், மாங்காய், நெல்லித்துண்டுகள், இஞ்சித்துண்டுகள் சிறிதளவு

செய்முறை:

கம்பை எட்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து, துணியில் கட்டி எட்டு மணி நேரம் காற்றில் உலரவிட்டால், மறுநாள் முளைத்திருக்கும். இதை உரலில் இடித்து மாவாகவும், குருணையாகவும் தனித்தனியே எடுத்துக்கொள்ளவும் (முளைக்கட்டாமல் செய்ய வேண்டுமானால் இரண்டு மணி நேரம் ஊறிய கம்பு அல்லது கேழ்வரகு அல்லது விருப்பத்துக்கேற்ப பிற தானியங்களையும் இடித்துச் சலித்து, குருணை மற்றும் மாவாக தனித்தனியே எடுத்துக்கொள்ளவும்).

ஒரு மண்பானையில் 600 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி, கொதிக்கவிடவும். அதில் முதலில் குருணையைப் போட்டு பாதி வெந்த பின்பு மாவைப் போட்டுக் கிளறவும். தீ மிதமாகவே இருக்கட்டும். அடிப்பிடிக்கக் கூடாது. தண்ணீர் கூடுதலாகத் தேவையெனில் சேர்க்கலாம். வெந்து நன்றாகக் கெட்டியாகி களியாக வரும் சமயம், கைப்படாமல் துணியைக் கட்டி மூடிவிடவும். சிறிது ஆறியதும், கரண்டியால் எடுத்து தட்டுகளில் போட்டு சாப்பிடலாம். களி ஒட்டாமல் பார்க்க பந்து போல், சுவைக்கவும் நன்றாக இருக்கும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், மாங்காய், நெல்லித்துண்டுகளை சேர்த்து சாப்பிடலாம்.

இந்தக் களியை ஓரிரு நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். பசி அடக்கும், தெம்பு ஏற்றும் உணவு. மறுநாள் ஒரு டம்ளர் நீரில் மோர் கலந்து, 50 கிராம் களியை எடுத்து அதில் கரைத்து... தேங்காய், மாங்காய், நெல்லித்துண்டுகள், இஞ்சித்துண்டுகள் சேர்த்து கூழாகவும் சாப்பிடலாம்.


வத்தல் மற்றும் தக்காளி அல்லது குடமிளகாய், புடலைக்கூட்டு, புளிக்குழம்பு போன்றவைகளையும் தொக்கு, கத்திரிக்காய் பொரியல் கூட்டு இணைத்து சாப்பிடலாம்.

இதேபோல் ராகி, வரகு, தினையிலும் களி, கூழ் செய்து சாப்பிடலாம். இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் வேகவைத்து, புட்டாகவும் செய்து சாப்பிடலாம். கெட்டியாக ஒட்டாமல் இருக்கும் ராகி, கம்புக்களியை குழம்பு, கூட்டுடன் இணைத்துச் சாப்பிடலாம். மேலும் இதனுடன் இனிப்பு, தேங்காய்த் துருவல் இணைத்தும் செய்யலாம்; மோரில் கரைத்து இந்துப்பு, மாங்காய்த்தொக்கு, பூண்டு, இஞ்சி ஊறுகாய்களை இணைத்தும் சாப்பிடலாம்.