மலபார் ஸ்பெஷல்: கூட்டு கறி

மலபார் ஸ்பெஷல்: கூட்டு கறி

கூட்டு கறி என்பது மலாபார் ஸ்டைல் ரெசிபிக்களில் மிகவும் பிரபலமானது. பொதுவாக இந்த கூட்டு கறியை ஓணம் பண்டிகையன்று செய்வார்கள். இது மிகவும் எளிமையான மற்றும் ஆரோக்கியமான ரெசிபியும் கூட். அதிலும் இதனை சாதத்துடன் சேர்த்து, நெய் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த ஓணம் ஸ்பெஷல் மலபார் ஸ்டைல் கூட்டு கறியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

சுண்டல் - 1 கப் (வேக வைத்தது)
பட்டாணி - 1/2 கப் (வேக வைத்தது)
வாழைக்காய் - 1 (தோல் சீவி, வேக வைத்தது) சேனைக்கிழங்கு - 1 கப் (நறுக்கியது)
கேரட் - 1/2 கப் (நறுக்கியது)
பூசணிக்காய் - 1/2 கப் (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1/2 கப் (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

மசாலாவிற்கு...

தேங்காய் - 1 கப் (துருவியது)
வரமிளகாய் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மசாலாவிற்கு கொடுத்த பொருட்களை வாணலியில் போட்டு, லேசாக வறுத்து, நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அனைத்து காய்கறிகளையும் போட்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும். பின் விசிலானது போனதும், மீண்டும் அந்த குக்கரை அடுப்பில் வைத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை சேர்த்து, 10-15 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இறுதியில் ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குக்கரில் உள்ள கலவையில் ஊற்றி கிளறிவிட்டால், சூப்பரான கேரளா ஸ்டைல் கூட்டு கறி ரெடி!!!