ஆவக்காய் மாங்காய்

ஆவக்காய் மாங்காய்

தேவையானவை:

நல்ல புளிப்பும் நாரும் உள்ள பச்சை மாங்காய் (மீடியம் சைஸ்) - 20 (கையோடு ஒரு துணி, தூக்கு வாளியில் தண்ணீர் எடுத்துச் சென்று, வாங்கிய மாங்காய்களை கழுவி நன்றாய் துடைத்து, பின் கடைக்காரரைக் கொண்டே அதை கொட்டையுடன் வெட்டி துண்டுகள் போட்டு எடுத்து வரலாம்), மிளகாய்த்தூள் - 250 கிராம், கடுகுப் பொடி - 100 கிராம், வெந்தயம் - 50 கிராம், கொண்டைக்கடலை - 50 கிராம், பொடித்த கல் உப்பு - ஒரு கப், நல்லெண்ணெய் - 4 கப், மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

மாங்காய்களை சுத்தமான துணியில் பரத்தி ஈரம் போக நாலு மணி நேரம் நிழலில் உலர்த்தவும். வெந்தயம், கொண்டைக்கடலையை வெயிலில் காய வைத்து எடுக்கவும். ஒரு குழிவான பெரிய பேஸின் அல்லது தட்டில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கடுகுப் பொடி, உப்பு, கடலை, வெந்தயம் சேர்த்து மரக்கரண்டியால் நன்கு கலக்கி அதில் மாங்காய்த் துண்டுகளை போட்டு நன்றாக புரட்டவும். சுத்தமான, ஈரமில்லாத ஜாடியில் மாங்காய் துண்டுகளைப் போட்டு, மேலாக நல்லெண்ணெயை ஊற்றி மூடி, சுத்தமான வெள்ளைத் துணியால் வாய்க்கட்டு போட்டு, வெயிலில் (மூடியில்லாமல்) வைத்து எடுக்கவும். எண்ணெயில் மாங்காய்கள் மிதக்கும் அளவுக்கு ஊறியதும் பரிமாறவும்.