வெந்தய மாங்காய்

வெந்தய மாங்காய்

தேவையானவை:

கெட்டியான புளிப்புள்ள மாங்காய் - 20 (மீடியம் சைஸ்), காய்ந்த மிளகாய் - 200 கிராம், வெந்தயம் - 100 கிராம், மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன், பொடித்த கல் உப்பு - ஒரு கப், நல்லெண்ணெய் - 4 கப். தாளிக்க: கடுகு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4.

செய்முறை:

மாங்காய்களை கழுவி, ஈரத்துணியால் துடைத்து துண்டுகளாக வெட்டவும். இதை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஒரு ஜாடியில் போட்டு மூடி, சுத்தமான வெள்ளைத் துணியால் வாய் கட்டு போட்டு, தினமும் குலுக்கிக் கொள்ளவும். மூன்று நாட்கள் ஊறிய பின் தண்ணீரை வடித்து, மாங்காய் களை பெரிய தட்டில் போட்டு, வெயிலில் காயவிடவும். இதை மீண்டும் அதே உப்பு தண்ணீரில் போட்டு ஜாடியில் போடவும். இப்படி 5 நாட்கள் வெயிலில் வைத்து மாந்துண்டுகள் ஈரமில்லாமல் நன்றாக காய்ந்த பின் ஒரு தட்டில் வைக்கவும். காம்பு நீக்கிய காய்ந்த மிளகாயை ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சிவக்க வறுத்து எடுக்கவும். வெந்தயத்தை இதே போல் வறுத்தெடுக்கவும். பின்பு இரண்டையும் மிக்ஸியில் நைஸாக பொடித்து எடுக்கவும்.

ஒரு பேஸினில் அரைத்த பொடி, உப்பு சேர்த்து, உலர்ந்த மாங் காய்களை போட்டு நன்றாக புரட்டி ஜாடியில் போடவும். சிறிது எண்ணெயில் கடுகை வெடிக்க விட்டு காய்ந்த மிள காய் சேர்த்து, இதை மாங்கா யுடன் சேர்க்கவும். நல்லெண்ணையை புகை வரும்படி சூடு படுத்தி ஆறவிடவும். இதையும் மாங்காயுடன் சேர்த்து மூடி, வாய்க்கட்டு போட்டு, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கிளறி, வெயிலில் காய வைத்து எடுத்தால்... ருசியோ ருசியாக வெந்தய மாங்காய் தயார்.