கேசார் பிஸ்தா குல்பி!!!

கோடைக்கு இதமான... கேசார் பிஸ்தா குல்பி!!!


கொளுத்தும் கோடையில் நன்கு குளுகுளுவென, ஏதாவது உடலுக்கு இதத்தைக் கொடுக்கும் ஐஸ் க்ரீம், மில்க் ஷேக், ஸ்மூத்தி மற்றும் குல்பி போன்றவற்றை சாப்பிட வேண்டுமென்று தோன்றும். மேலே சொன்னவற்றில் அனைவருக்கும் ஐஸ் க்ரீம், மில்க் ஷேக், ஸ்மூத்தி போன்றவற்றை நன்கு செய்யத் தெரியும். ஆனால் குல்பியை செய்யத் தெரியுமா என்று கேட்டால், பலரும் தெரியாது என்று தான் சொல்வார்கள். பொதுவாக நாம் குல்பியை இரவில் தான் சாப்பிடுவோம். ஏனெனில் அப்போது தான் விற்றுக் கொண்டு வருவார்கள். அது வரைக்கும் நாம் அதனை சாப்பிடுவதற்காக காத்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யத் தெரிந்தால் எதற்கு காத்திருக்க வேண்டும். குல்பியில் பல வெரைட்டிகள் உள்ளன. அவை கேசார், பாதாம், பிஸ்தா, மலாய், மாம்பழம், லிச்சி மற்றும் பல போன்றவை. இத்தகையவற்றில் ஏதாவது ஒன்றை வீட்டிலேயே கொஞ்சம் முயற்சி செய்து பார்த்தால், அவற்றை இரவில் என்ன எந்த நேரத்திலும் சாப்பிடலாம் அல்லவா! இப்போது அவற்றில் ஒன்றான கேசார் பிஸ்தா குல்பியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

க்ரீம் பால் - 2 லிட்டர்
கன்டென்ஸ்ட்டு பால் - 200 மில்லி லிட்டர்
குங்குமப்பூ - 2 பெரிய சிட்டிகை
பிஸ்தா - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் க்ரீம் பாலை பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் அதில் குங்குமப்பூவை போட்டு, தீயை குறைவில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். பாலானது 2 லிட்டரில் இருந்து 1 லிட்டராக ஆன பின்பு, அதில் கன்டென்ஸ்ட்டு பால், ரோஸ் வாட்டர், ஏலக்காய் பொடி மற்றும் பிஸ்தா சேர்த்து, ஒரு கொதி விட்டு, இறக்கி அறை வெப்பநிலையில் குளிர வைக்க வேண்டும். பின்பு அந்த கெட்டியான பாலை, குல்பி கிண்ணத்திலோ அல்லது வேறு ஏதாவது வித்தியாசமான வடிவில் இருக்கும் கிண்ணத்திலோ ஊற்றி, குச்சியை நடுவே வைத்து, ஃப்ரீசரில் இரவு முழுவதும் வைக்க வேண்டும். பிறகு காலையில் எழுந்து அதனை எடுத்து, வெதுவெதுப்பான நீரில் முக்கி எடுத்தால், அந்த கிண்ணமானது எளிதில் வெளியே வந்துவிடும். பிறகு என்ன, சூப்பரான கேசார் பிஸ்தா குல்பி ரெடி!!!