உருளைக்கிழங்கு கோப்தா

உருளைக்கிழங்கு கோப்தா

உருளைக்கிழங்கு பிரியர்களே! இது வடஇந்திய ரெசிபிக்களில் மிகவும் பிரபலமான ஒன்று. பொதுவாக இந்த ரெசிபியை மலாய் கொண்டு தான் செய்வார்கள். ஆனால் இங்கு மலாய்க்கு பதிலாக உருளைக்கிழங்கு பயன்படுத்தி எப்படி செய்வது என்று கொடுத்துள்ளது. சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு கோப்தா ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 6-7 (வேக வைத்து தோலுரித்தது) பச்சை மிளகாய் - 2-3 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
முந்திரி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு மசித்து, அத்துடன் சோள மாவு, 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 டீஸ்பூன் சீரகப் பொடி, 1 டீஸ்பூன் மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஈரமான கையால் அதனை சிறு சிறு உருண்டைகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தீயை குறைத்து, அதே எண்ணெயில் பட்டை, இஞ்சி, தக்காளி, முந்திரி பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, பின் அத்துடன் மீதமுள்ள மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், சீரகப் பொடி சேர்த்து நன்கு கிளறி, சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்த, எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்கி விட வேண்டும். பின் அதில் தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் கொதிக்க விட்டு, பின்பு பொரித்து வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு கோப்தா ரெடி!!!