ஜாமூன் – பறங்கிக்காய் சப்ஜி

ஜாமூன் – பறங்கிக்காய் சப்ஜி


தேவையானவை:

பறங்கிக்காய் (மஞ்சள்பூசணி) – 250 கிராம், குலோப்ஜாமூன் பவுடர் – அரை கப், தேங்காய்த் துருவல் – அரை கப், பச்சை மிளகாய் – 2, நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

தாளிக்க:

தேங்காய் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, உளுந்து – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு.

செய்முறை:

குலோப்ஜாமூன் பவுடருடன் நீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, சுண்டைக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். தேங்காய்த் துருவல் – பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் விட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, பறங்கிக்காயை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிப் போட்டு, அரை வேக்காடு வெந்ததும் பொரித்த குலோப்ஜாமூன்களையும் சேர்த்து எல்லாமாகச் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் (ஜாமூன்கள் உடைந்துவிடாமல் இருக்க வேண்டும்), தேங்காய் – பச்சை மிளகாய் விழுது சேர்த்து மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கவும். தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லித்தழை தூவி நன்றாகக் கலந்துவிடவும்.

இந்த ஜாமூன் – பறங்கிக்காய் சப்ஜி… சப்பாத்தி, தோசை போன்றவற்றுக்கு சைட் டிஷ் ஆகவும், சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடவும் ஏற்றது.