டஃப்டு குழிப்பனியாரம்

டஃப்டு குழிப்பனியாரம்

தேவையானவை:

பச்சரிசி - அரை கப்
புழுங்கல் அரிசி - ஒன்றரை கப்
உளுந்து - கால் கப்
அவல் - கால் கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் (அ) நெய் - தேவையான அளவு

பூரணம் செய்ய:

தேங்காய்த்துருவல் - அரை கப்
வெல்லம் - அரை கப்
நெய்யில் வறுத்த நட்ஸ் கலவை - கால் கப்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை :

அரிசி வகைகளுடன் அவல், உளுந்து மற்றும் வெந்தயத்தைச் சேர்த்து கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். மாவை வழித்தெடுத்து பாத்திரத்தில் உப்பு சேர்த்து கலக்கி, 6 மணி நேரம் புளிக்க விடவும். மாவு புளித்ததும், சிறிதளவு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும்.

வெல்லத்தைப் பொடித்து 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு பிறகு வடிகட்டவும். இத்துடன் தேங்காய்த்துருவல், வறுத்த நட்ஸ், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து கலவை கெட்டியாகும் வரை சூடாக்கிக் கிளறினால் பூரணம் தயார்.

பூரணம் ஆறியதும் குழிப்பனியாரப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, ஒவ்வொரு குழியிலும் தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய் விட்டு சூடானதும், கரைத்த மாவை குழியில் பாதியளவுக்கு ஊற்றவும். 2 நிமிடம் வேகவிடவும். பிறகு, சிறிதளவு பூரணத்தை எடுத்து மாவின் மேல் நிரப்பி, மீண்டும் கரைத்த மாவை ஊற்றி குழியை நிரப்பவும். பனியாரத்தை சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி வேக விட்டு எடுக்கவும்.

வெல்லத்தில் உள்ள இரும்புச் சத்து, நட்ஸ் வகைகளில் உள்ள புரோட்டின் சத்து உளுந்தில் உள்ள கால்சிய சத்து இவையெல்லாம் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உகந்தது.