தக்காளி உருளைக்கிழங்கு மசாலா

தக்காளி உருளைக்கிழங்கு மசாலா

சப்பாத்தி செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக உருளைக்கிழங்கு மசாலா சூப்பராக இருக்கும். ஆனால் அந்த உருளைக்கிழங்கு மசாலாவையே சற்று வித்தியாசமாக தக்காளி அதிகம் சேர்த்து சமைத்தால் எப்படி இருக்கும்? உண்மையிலேயே சூப்பரா இருக்கும். வேண்டுமெனில் முயற்சித்துப் பாருங்கள். இங்கு தக்காளி உருளைக்கிழங்கு மசாலாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப் உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பூண்டு - 4 பற்கள்
வரமிளகாய் - 2
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து சிறிது நேரம் பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.
பின் அதில் உருளைக்கிழங்கை சேர்த்து, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து உருளைக்கிழங்கு நன்கு மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.
அதே சமயம் மற்றொரு அடுப்பில், சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, உருளைக்கிழங்கு மசாலாவில் ஊற்றி கிளறி இறக்கினால், தக்காளி உருளைக்கிழங்கு மசாலா ரெடி!!!