வெந்தயப் பொரியல்

வெந்தயப் பொரியல்

'உடலுக்குக் குளிர்ச்சி தரும் வெந்தயத்தை என் அம்மா அடிக்கடி உணவுகளில் சேர்ப்பாங்க. அதிலும் அம்மா செய்யும் ஸ்பெஷல் வெந்தயப் பெரியலை விரும்பிச் சாப்பிடுவோம். வெந்தயம் கசப்பா இருக்கும் என்பதால், தேங்காய், துவரம்பருப்புடன் வெந்தயப் பொரியல் செய்து தருவாங்க. அதில் சுத்தமா கசப்பே தெரியாது. நல்ல வாசனையாவும் இருக்கும் வெந்தயப் பொரியல் செய்யும் முறையைச் சொல்கிறார்.

தேவையானவை:

வெந்தயம் - ஒரு கப்,
துவரம்பருப்பு - அரை கப்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, மஞ்சள் தூள் - சிறிதளவு.
காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய் - தலா 2.

தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு.

செய்முறை:

வெந்தயத்தை முந்தைய நாள் இரவே ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் நீரை வடித்துவிட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். துவரம்பருப்பை, கிள்ளு பதத்தில் வேகவைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய்விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, அதில் வேகவைத்த வெந்தயத்தைப் போட்டு வதக்கி, வெந்த துவரம்பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கவும்.

சுவையான ஆரோக்கியமான வெந்தயப் பொரியல் ரெடி... (தேவைப்பட்டால், கடைசியில் சிறிது உப்பு சேர்க்கலாம்.)

பலன்கள்:

வெந்தயத்தில் நார்ச் சத்து அதிகம் இருக்கிறது. சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சியைக் கொடுக்கும்.