வேப்பம்பூ கார குழம்பு

வேப்பம்பூ கார குழம்பு

தேவையானவை:

சின்ன வெங்காயம் - 2 கப், வேப்பம்பூ - அரை டேபிள்ஸ்பூன், பூண்டு - 4 பல், புளி - தேவையான அளவு, மிளகாய் தூள், சாம்பார் பொடி - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், தனியா தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வேப்பம்பூவைப் போட்டு வறுத்துக்கொள்ளவும். புளியைக் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் பூண்டு, கறிவேப்பிலை போட்டு, மிளகாய் தூள், சாம்பார் பொடி, மஞ்சள் தூள் மற்றும் தனியாத் தூள் சேர்க்கவும். பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தேவைப்பட்டால், சிறிது எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். இதில், புளிக் கரைசலையும் சேர்த்து, நன்றாகக் கொதித்துவந்ததும், வறுத்த வேப்பம்பூவைச் சேர்த்துக் கலக்கி, ஒரு கொதிவந்ததும் இறக்கவும்.

பலன்கள்: காய்ச்சல் வந்தவர்களுக்கு இந்த குழம்பை செய்து கொடுக்கலாம். உடலுக்குத் தெம்பு கூடும். வயிற்றுப் புண்னை ஆற்றும்.