வாழைப்பழ பிரட்

வாழைப்பழ பிரட்

பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தையை சந்தோஷப்படுத்த வேண்டுமா? அப்படியானால் வாழைப்பழ பிரட் ரெசிபி செய்து கொடுத்து அசத்துங்கள். இந்த ரெசபியானது சற்று வித்தியாசமாக இருப்பதுடன், குழந்தைக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

மேலும் வாழைப்பழத்திலும் எண்ணற்ற நன்மைகள் நிறைந்திருப்பதால், அதனைக் கொண்டு பிரட் செய்து கொடுத்தால், அவர்கள் மகிழ்ச்சியுடன் அதனை சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த வாழைப்பழ பிரட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 3 கப்
வாழைப்பழம் - 5 (கனிந்தது மற்றும் மசித்தது)
பேக்கிங் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
கேஸ்டர் சர்க்கரை/சர்க்கரை பொடி - 1/2 கப்
நாட்டுச்சர்க்கரை - 1/2 கப்
முட்டை - 3 (அடித்தது)
எண்ணெய் - 1/2 கப்
வென்னிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரி செல்சியஸில் சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் லோஃப் பேனில் வெண்ணெய் தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பௌலில் மைதா, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் சர்க்கரை பொடி மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும்.

பிறகு மற்றொரு பௌலில் முட்டை, எண்ணெய் மற்றும் வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் மசித்து வைத்துள்ள வாழைப்பழத்தை மைதா மாவு கலவையில் சேர்த்து, அத்துடன் முட்டை கலவையை ஊற்றி நன்கு கெட்டியான மாவு போல வரும் வரை அடிக்க வேண்டும். அடுத்து, அதனை வெண்ணெய் தடவி வைத்துள்ள லோஃப் பேனில் ஊற்றி பரப்பி, ஓவனில் வைத்து, 40 நிமிடம் பேக் செய்து எடுத்தால், சுவையான வாழைப்பழ பிரட் ரெசிபி ரெடி!!!

இதன் மேல் தேனை ஊற்றி குழந்தைகளுக்கு கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.